தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி, பாமக ராமதாஸ் அணி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள். இன்னும் சில நாள்களில் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அவ்வப்போது கூட்டணி குறித்து மேடைகளில் பேசினாலும், இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இரட்டை இலக்க தொகுதிகள், ராஜ்யசபா சீட் என டிமாண்ட் செய்து வருவதால் திமுக, அதிமுக கட்சிகள் யோசித்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் முதல்முறையாக கலந்து கொண்டார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், பிரேமலதாவும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜகி வாசுதேவிடம் அறிமுகம் செய்துவைத்தார். பின்னர், இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்து பரிமாறி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அதிமுக- பாஜ-தேமுதிக கூட்டணிக்கு தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது என தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த சந்திப்பு மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஈஷா சிவராத்ரி விழாவை முடித்துக்கொண்டு பிரேமலதா நேற்று காலை சென்னை திரும்ப வேண்டியது. ஆனால், அவர் சென்னை செல்லவில்லை. மாறாக, கோவையிலேயே தங்கிவிட்டார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உத்தரவை ஏற்று, எஸ்.பி.வேலுமணியும், பிரேமலதாவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக கூட்டணிக்கு பிரேமலதாவை வரவழைக்கும் அசைன்மெண்ட் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், ‘’எங்களது கூட்டணிக்கு தேமுதிக வரும்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
* கூட்டணியை உருவாக்கும் ஈஷா
கடந்த ஆண்டு நடைபெற்ற கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பிறகுதான் அதிமுக-பாஜ கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில், இந்த ஆண்டு எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்திருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிப்பதற்கு, இந்த சந்திப்பு அச்சாரமாக அமைந்துள்ளது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
* கூட்டணியே அறிவிக்கல… அதுக்குள்ள நேர்காணல்
திமுக மற்றும் அதிமுக தரப்பிடம் கூட்டணி பேசி வந்த நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை வரை நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: விருப்ப மனு அளித்தவர்களிடம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும். 20ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், மதியம் 3 மணிக்கு மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும்.
21ம் தேதி காலை 10 மணிக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும், மதியம் 3 மணிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் நேர்காணல் நடைபெறும். 22ம் தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கும், மதியம் 3 மணிக்கு நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்துக்கும் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
