அன்புமணிக்கு நான் எழுதும் கடிதம்: இடஒதுக்கீடுக்கு எதிராக இருக்கும் அதிமுக-பாஜவுடன் கூட்டணி வைக்கலாமா? வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தது யார்? காடுவெட்டி குரு மகள் சரமாரி கேள்வி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜ-அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ளது. இந்த கூட்டணி அறிவிப்பு வெளியானவுடன் பல்வேறு சர்ச்சைகளும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சேர்ந்துள்ளார் என்று வன்னிய சமூக அமைப்புகள் தொடர்ந்து கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் காரணமாக, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, ஜெ.குரு பாமக என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் பலர் நிர்வாகிகளாக சேர்ந்து உள்ளனர். விருதாம்பிகை வடமாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், யார் வன்னியர்களுக்கு துரோகம் செய்தார்கள் அன்புமணி அவர்களே? நீங்களா? மற்றவர்களா? என்று நிர்வாகிகளுக்கு விருதாம்பிகை ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: வன்னியர்களின் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதம் நிலைப்பாட்டுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, ‘திருச்சியில் முக்குலத்தோர், முத்தரையர் இருக்கும் போது வன்னியர் பிரச்னை முடிந்து போனது’ என்று கூறுகிறார். இதை நீங்களும் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தீர்கள்.

மேலும், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு, வன்னியர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது. 25 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. ராமதாஸ், காடு வெட்டி குருவை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தார் ஜெயலலிதா. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தால் தமிழ்நாட்டில் ஜாதிக்கலவரம் வரும் என்று பாஜ கூறுகிறது. இவர்களுடன் கூட்டணி வைத்து துரோகம் செய்தது யார்? வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று கூறும் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்து துரோகம் செய்தது யார்?

எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களின் ஓட்டுக்காக, வன்னியர் இடஒதுக்கீட்டு மசோதாவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு வெளியிட்டு ஏமாற்றினார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் அதை நடைமுறைப்படுத்தினார். தற்ேபாது இது, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்களே கூறினீர்கள், திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடினார்கள் என்று. இப்போது கூறுங்கள் வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தது யார்? நீங்களா? மற்றவர்களா?. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* நல்லது செய்தது திமுக அரசு தான்
‘‘திமுக ஆட்சியில் போராட்டம் இல்லாமல் 1989ம் ஆண்டு, கலைஞரால் வன்னியர் உட்பட பல ஜாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்று வரையும் இதுதான் நடைமுறையில் உள்ளது. மேலும் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி, ஓய்வூதியம் கலைஞரால் வழங்கப்பட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 25 தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணி மண்டபம் கட்டியுள்ளார். அவர்களை இடஒதுக்கீடு போராளி என்று சட்டமன்றத்தில் அங்கீகரித்துள்ளார். இவ்வளவு விஷயங்களை திமுக அரசு வன்னியர்களுக்காக செய்துள்ளது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது’’ என்று கடிதத்தில் விருதாம்பிகை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: