புதுச்சேரியில் சின்னம் கொடுத்து ரொம்ப லேட்டா ‘ரியாக்ட்’ பண்ண விஜய்: ‘விசில்’ ஊதி 4 நாள் ஆவுதுங்க… நாங்க சனி, ஞாயிறு லீவுங்க…‘ஒன்லி வீக் டேஸ்லதான் பார்ப்போம்’

தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு விசில் சின்னத்தைப் பொதுச் சின்னமாக ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். இது தொடர்பான கடிதத்தை கடந்த ஜனவரி 22ம் தேதி தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிக்கு அனுப்பியது. ஆனால் அதைப் பார்க்காத அந்த கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், தங்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கியதைச் செய்திகள் மூலம்தான் அறிந்து கொண்டதாகப் பொதுவெளிகளில் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். பிறகு விசில் சின்னம் கிடைத்துள்ளது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜய் ‘‘தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது’’ என அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாட்டைப்போல் புதுச்சேரியிலும் விசில், ஆட்டோ உள்ளிட்ட 10 விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டு, பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பித்திருந்தது தவெக. இந்நிலையில், தவெகவிற்கு தமிழகத்தில் வழங்கப்பட்டதைப் போல புதுச்சேரியிலும் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை குறைந்தபட்சம் அந்த நாளிலேயே செய்திகளில் பார்த்து தெரிந்துகொண்ட அந்தக் கட்சி நிர்வாகிகள், புதுச்சேரியில் விசில் சின்னம் ஒதுக்கியதை நான்கு நாட்கள் கழித்துப் பொறுமையாக அறிவித்துள்ளார்கள். அந்த கட்சிக்குப் புதுச்சேரியில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் பிப்.12ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தவெக சார்பில் நேற்றுதான் விசில் சின்னம் கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகக் குழு நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமாரும் நேற்று தான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வெளியிட்டு விசில் சின்னம் கிடைத்துள்ளதை அறிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டியது அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தான்.

இந்திய தேர்தல் ஆணையம் 12ம் தேதி அனுப்பிய கடிதத்தை நான்கு நாட்கள் கழித்துப் பார்க்கும் கட்சிதான், தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்போம் எனக் கூறிக்கொண்டிருக்கிறது. அக்கட்சியின் தலைவரைப் போலவே அனைத்து நிர்வாகிகளும் சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக்கொண்டு பார்ட் டைம் அரசியல் கட்சி நடத்தி வருகிறார்கள் போல் தெரிகிறது. ஒன்லி வீக் டேஸ்லதான் பார்ப்போம் என்று போல், தேர்தல் ஆணையம் அறிவிப்பை 4 நாட்கள் விடுமுறையை முடித்துகொண்டது தெரிந்து கொண்டு உள்ளார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

* நெல்லையில் தோற்பது உறுதி: டிடிவியின் காலில் விழுந்து அமைச்சரானவர் நயினார்; சி.டி.நிர்மல்குமார் ஒரே போடு
மதுரை விமான நிலையத்தில் தவெக இணை பொதுச்செயலாளர் சிடி.நிர்மல் குமார், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம் தவெக கூட்டத்தில் ஏற்பாடுகளில் இருந்த குறைபாடால் ஒருவர் இறந்ததாக கூறுகிறீர்கள். 4,998 பேர்தான் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். மருத்துவர் முதல் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்தது. மக்கள் பாதுகாப்பை மனதில் கொண்டுதான் முனைப்புடன் செயல்படுகிறோம். யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று எங்கள் நிர்வாகிகளிடம் சொல்லி இருந்தோம் ஆனால் ஒரு சில நிர்வாகிகளை அனுமதித்திருக்கிறார்கள். இனி தொண்டர்கள் வரும்போது கடுமையான பாதுகாப்பை வழங்குவோம்.

தவெகவில் விருப்ப மனுக்கள் வந்து கொண்டிருக்கிறது. வேட்பாளரை தலைவர்தான் தேர்வு செய்வார். நயினார் நாகேந்திரன், டிடிவி.தினகரனின் காலில் விழுந்து 3 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா அவரது திறமையை பார்த்துதான் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பார். (சிரிக்கிறார்) பிறகு அவருக்கு எந்தவித முக்கிய பொறுப்பும் இல்லை. அவர் திமுகவை விமர்சிப்பதில்லை. தினமும் எங்களை பற்றித்தான் பேசுகிறார். திருநெல்வேலியில் அவர் தோற்பது உறுதி. அவர் என்ன சிந்திக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவரது கூட்டணி கட்சிகளை இணக்கமாக வைத்து தேர்தலை சந்திக்கிறாரா அவரது கட்சிக்குள்ளேயே போராடுகிறாரா என்று தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: