விசில கம்மி பண்ணுங்க… கை தட்டுங்க.. அன்புமணி கடுப்பு

சென்னை, பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாணவர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்க மாநில ஒருங்கினைப்பாளர் கீர்த்தி ரதன், மாநில தலைவர் விஜயராசா உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு கூட்டம் எனவும், 11 மணிக்கு அன்புமணி கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மதியம் 12 மணிக்கு மேல் தான் அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். கூட்டத்திற்கு அன்புமணி வந்து நிகழ்ச்சி மேடையில் ஏறியவுடன் அவரது தொண்டர்கள் அனைவரும் விசில் அடித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடுப்பான அன்புமணி மைக்கை வாங்கி, ‘விசில கம்மி பண்ணுங்க, கை தட்டுங்க…’ என தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத தொண்டர்கள் தொடர்ந்து விசில் அடித்தபடியே இருந்தனர். இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் முடிவு: கிருஷ்ணசாமி தகவல்
கோவையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பேன். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாகவும், உறுதியாகவும், வலுவாகவும் இருக்கிறது’ என்றார். கூட்டணி ஆட்சி என்பதை தவெக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் நிலையில், அக்கட்சியுடன் தான் கூட்டணியா என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் கூட்டணியை கோவையில் இருந்து தான் அறிவிப்பேன்’ என பதிலளித்தார். தவெக கூட்டங்களில் தொடர் உயிரிழப்புகள் நிகழ்வது குறித்த கேள்விக்கு, ‘அது பற்றி என்னால் சொல்ல முடியாது. மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி தர கூடாது. 12 மணிக்கு கூட்டம் நடத்தினால் சன் ஸ்ட்ரோக் வரும் என்பதை ஒரு மருத்துவராக சொல்கின்றேன்’’ என பதிலளித்தார்.

* எடப்பாடி வீசும் அனைத்து பந்தையும் சிக்ஸராக அடிப்போம்: இந்திய கம்யூ பதிலடி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகளிர் உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள் என்றார். மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு உரிமைத்தொகையுடன் கோடைக்கால தொகையுடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கியது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த வீரபாண்டியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ.2,000 அல்ல, ரூ.42 ஆயிரம் கூட தருவதாக கூறுவார். அதனை ஒடுக்கும் வகையில் அவர்கள் வீசும் அனைத்து பந்துகளையும் நாங்கள் சிக்ஸராக அடிப்போம் என்றார்.

* ‘தவெக’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்: விஜய் ஜனநாயகன் அல்ல அவர் ஒரு பிண நாயகன்; ஒரே வார்த்தையில் முடித்த அர்ஜுன் சம்பத்
இந்து மக்கள் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் ஜனநாயகனல்ல பிண நாயகன். இதுவரை அவரது கூட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி வேண்டாமா மனசாட்சி உள்ளதா இல்லையா என தெரியவில்லை. கடும் வெயிலிலும் அத்தனை தொண்டர்களையும் நிறுத்தி குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட இல்லாமல் செய்துள்ளனர். பந்தல் போட்டு கூட்டம் நடத்தக்கூட அவரிடம் பணம் இல்லையா? அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டலாமே தவிர தமிழக மக்கள் ஒருபோதும் ஆர்வம் காட்டப்போவதில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கூறும் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை. மீண்டும் அவர் நடிக்க தான் வரப்போகிறார்’’ என்றார்.

Related Stories: