மார்பில் பாய்ந்த வளர்த்த கிடா: மாஜிக்கள் எதிர்ப்பால் மண்டை காயும் ‘திண்டுக்கல்’

அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை.. எதிரியுமில்லை என்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் விசுவாசத்திற்கு எல்லாம் இங்கே வேலையில்லை என்பது போல ஒரு சம்பவம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆம்… அவரால் வளர்த்து விடப்பட்டவர்களே, அவர் மீது பாய்ந்து அரசியல் செய்வதால் கதிகலங்கி காணப்படுகிறார். ‘‘அவர்லாம் எம்ஜிஆருக்கே நெருக்கமா இருந்தவருப்பா…’’ என அதிமுகவில் சிலரை குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் திண்டுக்கல் சீனிவாசன். எம்ஜிஆர் துவங்கிய அதிமுக முதன்முதலாக தேர்தலில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் பெற்று தந்த தொகுதி திண்டுக்கல். அந்த தொகுதியில் 1989ல் நடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலில் எம்பி ஆனவர் திண்டுக்கல் சீனிவாசன்.

எம்ஜிஆருக்கு பிறகும் ஜெயலலிதாவின் அன்பை பெற்றிருந்ததால், அத்தொகுதியில் 1999 வரை தொடர்ந்து போட்டியிட்டார். அதன்பிறகு எம்ஜிஆர் கால சீனியர்களை கட்சியில் ஓரங்கட்டத் தொடங்கினார் ஜெயலலிதா. அந்த எதிர்ப்பு அலையில் தலைமறைவானவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். மாவட்ட அரசியல் நிலவரத்தை அறியவும், தனது செல்வாக்கை சரிய விடாமல் காப்பாற்றவும் தனது நிழல் போல ஒருவரை உருவாக்கினார். அவர்தான் நத்தம் விஸ்வநாதன். கால ஓட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும் அசுர வளர்ச்சி பெற்றார். ஜெயலலிதாவின் அன்பையும் பெற்றார். ஓபிஎஸ்க்கு பிறகு அடுத்த நம்பிக்கையான நபராகவே மாறினார் நத்தம் விஸ்வநாதன். அமைச்சராக மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளையும் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசனை விட செல்வாக்கானவராக திண்டுக்கல் மாவட்டத்தில் வலம் வந்தார்.

ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் 2016 தேர்தலில் அதிமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லாத தொகுதியான ஆத்தூர் தொகுதியில் (அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதி) போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. எதிர்பார்த்தவாறே படுதோல்வியை தழுவினார் நத்தம் விஸ்வநாதன். அதேநேரம் தான் ஒதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் சீனிவாசனை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வைத்து எம்எல்ஏவாக்கினார். வனத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். தேர்தலில் தோற்றதோடு விரக்தியில் இருந்த நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் அணிக்கு தாவினார். பின்னர் சுதாரித்து மீண்டும் எடப்பாடி டீமுக்கு என்டர் ஆனார்.

அதன்பின்னர் மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். தான் வளர்த்து விட்டவர் தனக்கு எதிராகவே கடை பரப்பிய கடுப்பில், இவரை எதிரியாகவே திண்டுக்கல் சீனிவாசன் பார்த்து வந்தார். இருவருக்கும் சுத்தமாகவே செட் ஆகாது. எனவே, இவருக்கு போட்டியாக, தனக்கு நெருக்கமான ஒருவரை முதன்மை பதவிக்கு கொண்டு வர திட்டமிட்டார் திண்டுக்கல் சீனிவாசன். அவர்தான் மருதராஜ். இவர் திண்டுக்கல் மேயர் பதவி பெற பெரும் சிபாரிசும் செய்தார்.

நத்தம் விஸ்வநாதனைப் போலவே ஒரு கட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியப்புள்ளியாகவே மாறினார் மருதராஜ். இவர் சார்ந்த சமூகத்தின் ஓட்டுகள்தான் திண்டுக்கல் எம்எல்ஏ தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆகையால், இவரை எப்போதுமே விடாமல் கூடவே வைத்திருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது இவர், தனது மகனை அடுத்த அரசியல் வாரிசாக முன்னிறுத்தி வருகிறார். இது மருதராஜ் தரப்புக்கு எரிச்சலை தந்துள்ளது.

அரசியலில் தன்னை ஓரங்கட்ட நினைப்பதால், அவரின் நிழலிருந்து தப்பிக்க திட்டமிட்ட இவர், கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை. பங்கேற்றாலும் காரசார விவாதம் நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. இது சமீபத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திலும் தொடர்ந்தது. விளைவு… நத்தம் விஸ்வநாதனை தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் மீது தீவிர மோதலை வெளிப்படுத்த மருதராஜ் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக மாஜி எம்எல்ஏ தவெகவில் ஐக்கியம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2016ல் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகரன், அதிமுக மாநில இளைஞரணி இணைசெயலாளராக செயல்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியாக இருந்து வந்த மனோகரன், ஓபிஎஸ் அணியின் அமைப்பு செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மனோகரன் சென்னையில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

Related Stories: