வரும் மார்ச் 1ம் தேதி மதுரை மண்டேலா நகர் அருகே பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தேஜ கூட்டணி கட்சிகள் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், அன்புமணி, ஜான் பாண்டியன், ஏசி.சண்முகம், டிடிவி.தினகரன், பாரிவேந்தர், திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சிபிஐ விசாரணையை தொடர்ந்து விஜய், பாஜவைப் பற்றி பேசவில்லை எனக்கூறுகிறீர்கள். இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டுதான் இருக்கோம். கண்டனம் தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்கோம். கரூர்ல 41 பேர் இறந்து போனாங்க… அதற்கு விஜய் தான் காரணம். பகல் 12 மணிக்கு வர்றதா சொல்லிட்டு, ராத்திரி 7 மணிக்கு வர்றாரு… குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்து தரலை. அது மாதிரி இப்ப கூட சேலத்துல ஒருத்தர் இறந்துட்டாரு… அவரோட எல்லா கூட்டத்திலுமே இறப்பு… நல்ல சகுனம் தானே அவங்களுக்கு.
அவங்க கொள்கை… கொள்கைன்னு சொல்றாங்க… அதை முதல்ல புத்தகம் போட்டு தரச் சொல்லுங்க… பேப்பர்ல மட்டும் இருந்தால் எப்படி. அவங்க கொள்கைக்கு மாறானது பாஜ என்று சொல்லலாம். இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், ‘‘தேஜ கூட்டணியில் தேமுதிக இணையுமா’’ என்றனர். அதற்கு, ‘‘தேமுதிக கூட்டணியில் இணைவது குறித்து மார்ச் 1ம் தேதி பார்ப்போம்’’ என்றார். ‘‘திரிஷா பற்றி நீங்கள் கூறியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாரே…’’ என்ற கேள்விக்கு, ‘‘என்னை பொறுத்தவரை யாருடைய மனதும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான்’’ என்றார்.
* முதல்வருக்கு பாராட்டு
நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளது. இதில் கோடைகால விடுமுறைக்கு கூடுதலாக 2 ஆயிரம் தந்துள்ளது. எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்திருக்கிறார். நாங்கள் வழக்கு தொடரப் போவதாக கூறுகிறார்கள். வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரம் இல்லை’’ என்றார்.
* வேலூரா? தென் மாவட்டமா? ஏசிஎஸ் கன்பியூஸ்
எத்தனை முறை தோற்றாலும், இந்த முறை நான் ஜெயிக்காமல் விடமாட்டேன் என்று தாமரை கட்சி ஆதரவுடன் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் களம் கண்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சட்டமன்ற தேர்தலிலும் நிற்க அதிமுக தலைமையிடம், என்டிஏ கூட்டணியில் வேலூர் தொகுதியை தனக்குத்தான் தர வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கிறாராம். அதோடு, பாஜ, இலை கட்சி கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு குறைந்த வாக்குகளில் தான் தோல்வியிடைந்தேன் என்று புள்ளிவிவரத்துடன், சீட்டு கேட்கிறாராம். அதிமுக தலைமை அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து, ஏற்கனவே புகைச்சலில் இருந்த வீரமானவரை அழைத்து அதிமுக தலைமை சமாதானம் செய்து வைத்ததுடன், உள்ளூர் நிர்வாகிகளையும் எச்சரித்து ஒழுங்காக வேலைபாருங்கள் என்று கூறியுள்ளதாம். அதேநேரத்தில் அதிமுகவின் மாநகர மாவட்ட செயலாளராக உள்ள எஸ்.ஆர்.கே.அப்பு தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று தலைமையிடம் கேட்டு வருகிறாராம். அதற்கேற்ப விருப்ப மனுக்களையும் வழங்கியுள்ளாராம். இதுஒருபுறமிருக்க, அரசியல் கள நகர்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற யோசனையில், தென்தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கலாம் என்ற யோசனையும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் உள்ளதாம். அதையொட்டியை மதுரையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு 143 அடியில் சிலை அமைக்கும் வகையில் அறக்கட்டளையை நிறுவியுள்ளதுடன், அதுதொடர்பான விழாவுக்கு தேசிய தலைவர்களை அழைக்கும் முடிவிலும் அவர் இருக்கிறாராம்.
இதன் மூலம் தென்தமிழக தாமரை வாக்குகளையும், பிள்ளைமார் வாக்குகளையும், முக்குலத்தோர் வாக்குகளையும் சுலபமாக அறுவடை செய்ய முடியும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என்றபடி தனது ரூட்டில் கணக்கு போட்டு வருகிறாராம். ஆனால், களநிலவரமோ என்டிஏ கூட்டணிக்கு வேலூரை பொறுத்தவரை கலவர நிலவரம்தான் என்கின்றனர் நடுநிலையாளர்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதி என்றாலும், சட்டமன்ற தொகுதி என்றாலும் இங்கு வெற்றியை தீர்மானிப்பது சிறுபான்மையினர் வாக்குகள்தான்.
எனவே, இந்த முறையாவது வேலூர் நமக்கு கை கொடுக்குமா? இல்ல தென்தமிழகத்துக்கு போய்டலாமான்னு களநிலவர குழப்பத்தில் ஏசிஎஸ் இருந்து வர்றாராம். அதுமட்டுமின்றி வேலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை இது திமுகவின் கோட்டை. அதை அசைக்க முடியாது என்கின்றனர் திமுக தலைமையிலான கூட்டணியினர். அதற்கேற்ப பூத் கமிட்டிகளை அமைப்பதிலும், பூத் முகவர்கள் கூட்டங்களை அடிக்கடி நடத்துவதிலும், தெருமுனை பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என்று திமுக கூட்டணி பாய்ச்சல் காட்டி வருகிறது.
