ரூ.1000 தடுக்க முயற்சித்தால் என் மக்களுக்கு ரூ.5,000 தருவேன்: தமிழகம் முழுவதும் போஸ்டர்

தமிழகம் முழுவதும் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசால் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் விரைவில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து மகளிர் உரிமை தொகை வழங்க தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து தமிழக அரசு பிப்ரவரி மாதம் வழங்க வேண்டிய உரிமை தொகையுடன் மார்ச், ஏப்ரல் என ரூ.3 ஆயிரம், கோடை சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த திடீர் முடிவு மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் நீங்கள் 1,000 ரூபாயை தடுக்க முயற்சித்தால், நான் என் மக்களுக்கு 5,000 ரூபாய் தருவேன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மகளிருக்கு ரூ.5,000 ஓபிஎஸ் வரவேற்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள், ‘‘தை முடிந்து மாசி பிறந்து விட்டதே’’ என கேட்டதற்கு, ‘‘பொறுமையாக இருங்கள்’’ என்றார். ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா’’ என்றதற்கு, ‘‘அப்படியா’’ என்றார். மகளிருக்கு ரூ.5000 கொடுத்ததை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, ‘‘தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் வந்த பிறகு தான் அதுபற்றி கருத்து கூற முடியும். மகளிருக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளனர். கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளனர். ரூ.5 ஆயிரம் கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள். தை மாதத்தை விடமாட்டேன் என்கிறீர்களே?’’ என கூறியவாறு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

* தவெக மேடையில் தாலியை கழற்றிய பெண்ணால் பரபரப்பு
தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டம் திருநின்றவூரில் நடந்தது. அப்போது திடீரென கூட்டத்தில் நுழைந்த பெண் ஒருவர் மேடையில் ஏறி கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி சுழற்றினார். மேலும், தான் ஐடி ஊழியர் என்றும், கோல்ட் மெடலிஸ்ட் என்றும் தொடர்ந்து பேசினார். இதனைக் கண்ட தவெக நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த பெண் தொடர்ந்து ஆங்கிலத்தில் நீதி வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து, கூட்டத்திற்கு வந்த பெண்கள் சிலர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அதற்குள்ளாக, பெண்ணின் உறவினர்கள் வந்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். கூட்டத்திற்கு வந்து பேசிய பெண் சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது.

Related Stories: