ஊத்துக்கோட்டையில் 72 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலம் வலுவிழந்தது: புதிதாக கட்ட வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, பிப்.16: ஊத்துக்கோட்டையில் 72 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில் ஆந்திரா-தமிழகத்தை இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலம் 1954ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, காளஹஸ்திரி போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.

தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது போல் ஆந்திராவில் ஸ்ரீ சிட்டி என்ற தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். மேலும், இந்த ஸ்ரீ சிட்டியில் உள்ள கம்பெனிகளுக்கு கனரக வாகனங்களில் இரும்பு உள்ளிட்ட உதிரி பாகங்கள் ஏற்றி செல்லப்படுகிறது. மேலும், ஆந்திராவில் இருந்து மண் லாரிகள் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றன. கனரக வாகனங்களும் செல்வதால் ஊத்துக்கோட்டை சத்தியவேடு (ஆந்திரா-தமிழ்நாடு) பகுதியை இணைக்கும் பாலம் வலுவிழந்து உள்ளது. மேலும், 72 வருடங்களுக்கு முன்பு கட்டிய இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்பதால், இதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: