‘சாக்ஷம்’ செயலியில் பதிவு செய்தால் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

திருவள்ளூர், ஏப்.13: ‘சாக்ஷம்’ செயலியில் பதிவு செய்தால் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் ‘சாக்ஷம்’ செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும்போது தேவைப்படும் சக்கர நாற்காலி, வாக்கு சாவடிக்கு வருவதற்கும் மற்றும் மீண்டும் வாக்களித்த பின் வீட்டிற்கு போய் சேர்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாளர் தேவை குறித்த
அனைத்து விவரங்களும் ‘சாக்ஷம்’ செயலியில் பதிவு செய்தால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குப்பதிவு செய்ய வரிசையில் நிற்க தேவையில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்டி விரைவாக வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். 21 வகையான மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்குப்பதிவு செய்யலாம், அதற்கான அணுகல் வசதி மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு செய்ய தடைகள் ஏற்பட்டால் நமது சைகை மொழியில் உதவுவதற்கு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் வீடியோ காலில் (வாட்ஸ் ஆப் எண்-7305158550) கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர்.

எனவே உங்களின் பிரச்னையை விரைவாக சீர் செய்து வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதர தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்; 18042508515 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026ஐ முன்னிட்டு தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை இணைந்து திருவள்ளுர் ஜெ.என்.சாலையில் உள்ள உழவர் சந்தை அருகில் திருவள்ளுர் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு சின்னத்தின் உருவச்சிலை (மாஸ்காட்) அமைக்கப்பட்டது.

இந்த தேர்தல் விழிப்புணர்வு சின்னத்தின் உருவச்சிலையை (மாஸ்காட்) மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மு.பிரதாப் திறந்து வைத்து பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வுவை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை அளிக்க வேண்டுமென பொதுமக்களிடையே வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர், இணை இயக்குனர் வை.ஜெயக்குமார், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் நா.தாமோதரன், நகராட்சி பொறியாளர் சரோஜா, சுகாதார அலுவலர் மோகன், மேலாளர் குழந்தை தேவராஜ், உதவி வருவாய் அலுவலர் பாலமுருகன், உதவி பொறியாளர் விஜி, ஓவர்சியர்கள் சீனிவாசன், பாலமுருகன், தமிழரசன், வருவாய் ஆய்வாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் விஜி, அக்கவுண்டன்ட் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: