கும்மிடிப்பூண்டி, ஏப்.13: கும்மிடிப்பூண்டி அருகே பர்தா அணிந்து நகை கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட மாதர்பாக்கம் கிராமத்தில் கன்யா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி நகைக்கடைக்கு பர்தா அணிந்து காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலில், ஐந்து பேர் காரில் அமர்ந்தபடி இருக்க ஒருவர் மட்டும் துப்பாக்கியுடன் நகை கடைக்குள் புகுந்து, ரமேஷை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணத்தை எடுத்து தான் கொண்டு வந்த பையில் வைக்குமாறு மிரட்டியுள்ளான்.
இதனால் ரமேஷ் மற்றும் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதைக் கேட்டு பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்டு ஆத்திரம் அடைந்த கொள்ளையன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் ரமேஷை தாக்கி விட்டு காரில் ஏறி கொள்ளைக் கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் பாதிரிவேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பர்தா அணிந்து பெண் வேடமிட்டு கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியதை அறிந்த காவல்துறையினர், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்த போது, அதில் ஒருவரது கைப்பேசி எண்ணில் இருந்து கொள்ளை சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு மாதர்பாக்கத்தில் இருந்து பேசியது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் கைப்பேசி எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தனிப்படையினர் ஊரப்பாக்கம் சென்று அங்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த கொள்ளை கும்பலை சுற்றி வளைத்தபோது சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேருடன் மேலும் 3 பேர் இருந்தனர். தொடர்ந்து 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட 9 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என உறுதி உறுதியானது. தமிழகத்தில் இவர்கள் அண்மை காலத்தில் வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டனரா என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
