திருவள்ளூர், ஏப்.10: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றது. இதனைத்தொடர்ந்து, 30.3.2026 முதல் 6.4.2026 வரையிலான நாட்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. 7.4.2026 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனையில், 172 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 160 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 12 வேட்பாளர்கள் வேட்பு மனுவினை திரும்ப பெற்றனர்.
தற்போது திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 160 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
அதன்படி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டது, 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் 2 மனுக்களை திரும்பப் பெற்றதால் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதியில் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டது, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் 2 மனுக்கள் திரும்பப் பெற்றதால் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டது, 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரு மனு திரும்பப் பெற்றதால் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டது, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரு மனு திரும்பப் பெற்றதால் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டது, 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மனுக்கள் யாரும் திரும்பப் பெறாததால் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆவடி சட்டமன்ற தொகுதியில் 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டது, 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் யாரும் திரும்பப் பெறாததால் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் 45 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டது, 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் யாரும் திரும்பப் பெறாததால் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டது, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் 4 மனுக்கள் திரும்பப் பெற்றதால் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாதவரம் சட்டமன்ற தொகுதியில் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 16 மனுக்கள் ஏற்கப்பட்டது. 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஒரு மனு மட்டும் திரும்பப் பெற்றதால் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 16 மனுக்கள் ஏற்கப்பட்டது, 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரு மனு மட்டும் திரும்பப் பெற்றதால் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 338 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 172 மனுக்கள் ஏற்கப்பட்டது, 166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 மனுக்களை திரும்பப் பெற்றதால் மொத்தம் 160 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
