திருத்தணி, ஏப்.9: திருத்தணி அருகே, சாலை வசதி இல்லாத பகுதியில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதால், டிராக்டர், லாரிகளில் அறுவடை செய்த நெற்பயிர்களை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், நவரை பருவத்திற்கான நெல் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பெயர் பதிவு செய்துள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி, சூரியநகரம், மத்தூர், சிறுகுமி, வீரகநல்லூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நவரை பட்டத்தில் சாகுபடி செய்த நெற்பயிரை அறுவடை செய்து விற்பனை செய்ய, கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார். இருப்பினும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிடங்குக்கு ஏரிக்கரை பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. டிராக்டர், லாரி செல்ல முடியாத நிலையில் சாலை இருப்பதால், இதுவரை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் உள்ளது.
அறுவடை செய்த நெல் தேக்கம்: கிருஷ்ணசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் அறுவடை செய்யும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் 200 டன் நெல்மணிகள் விவசாய நிலங்களில், திறந்த வெளியில் டிராக்டர்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால், அறுவடை செய்துள்ள நெல் மழையில் நனைந்து, வீணாகும் நிலை இருப்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இருப்பதால், சூரிய நகரம் பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் மெத்தனமாக இருப்பதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
