திருவள்ளூர், ஏப்.10: திருவள்ளூர் அருகே கண் பார்வையற்ற இளம்பெண்ணின் 2 வயது பெண் குழந்தை, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானது. திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொழுதவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருக்கும், ஆந்திர மாநிலம், வரதபாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் திருமணமானது. கண் பார்வை குறைபாடு உள்ளதை மறைத்து திருமணம் செய்ததாக கூறி, 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் சதீஷ், மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். ஆனால் மீண்டும் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், சுமதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், யக்ஷிதா என பெயர் வைத்து வளர்த்து வந்த அக்குழந்தைக்கு, தற்போது 2 வயது ஆகிறது. இந்நிலையில் தாய் சுமதி, நேற்று வீட்டுக்குள் இருக்கும்போது குழந்தை யக்ஷிதா, வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, குழந்தை தொட்டியில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளது. தாய்க்கு கண் தெரியாத காரணத்தால் கூச்சலிட்டுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
