பொன்னேரி, ஏப்.12: பொன்னேரி அடுத்த, ரெட்டியபாளையம் ஊராட்சியில், கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து, காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ரெட்டியபாளையம் ஊராட்சியில் ரெட்டிய பாளையம், சோமஞ்சேரி, அத்தமஞ்சேரி கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், ஆற்காடு பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்து பைப் லைன் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக காலமாகவே குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் திடீரென நேற்று பொன்னேரி-மீஞ்சூர் செல்லும் சாலையில், காலி குடங்களை வைத்து மாநகர பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, காட்டூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
