சோழவரம் அருகே 10 குடிசைகள் எரிந்து நாசம்

புழல், ஏப். 12: சோழவரம் அருகே நரிக்குறவர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசைகள் எரிந்து நாசமாகின. சோழவரம் அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவர் குடியிருப்பில் ஓலை கொட்டகைகளும், தட்டி அமைத்து நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென ஓலை குடிசைகளில் சில தீப்பற்றி மள மளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், 10க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகி நாசமாயின. கோடை வெயிலில் உக்கிரம் தாங்காமல் குடிசைகள் தீப்பற்றி எரிந்தனவா? அல்லது ஏதேனும் நாச வேலை காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: