பாசனத்திற்கு நீர் பற்றாக்குறையை சமாளிக்க ஏரி, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்

திருத்தணி, பிப்.14: கோடையில் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை சமாளிக்க ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று திருத்தணியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருத்தணி கோட்ட அளவில், வேளாண்மைத்துறை சார்பில் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பேசுகையில், உட்கோட்டத்தில் உள்ள நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரிகள், ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாரப்படாததால், நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கபடாத நிலையில், ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. எதிர் வரும் கோடையில் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி மதகு சரி செய்ய வேண்டும். ஏரிக்கு நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோட்ட பாதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், உரக்கடைகளில் உரங்கள் தட்டுப்பாடு பெயரில் விலை உயர்த்தி விற்பதை தடுக்க வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றார். ஆர்.கே.பேட்டை வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ராஜா நகரம் பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். ஏரி தூர்வாரி சீரமைத்தால், விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். பாண்டறவேடு ஏரி ரயில் பாதைக்காக மண் கொட்டி மூடப்படுவதாலும், அங்குள்ள நந்திமடுகு ரயில் பாதை மூடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நந்தி மடுகு பகுதியில் புதிதாக மடுகு ஏற்படுத்த ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: