மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று இஸ்ரோ நிறுவனத் தலைவர் வி.நாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறன. சந்திரனுக்கு வரும் 2040ம் ஆண்டுக்குள் மனிதனை இந்தியா அனுப்பி வைக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
அதற்கேற்றாற்போல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நடப்பாண்டில் அதிகளவு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆளில்லாத ராக்கெட் அனுப்பும் பணிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது சந்திரயான் 4, சந்திரயான் 5 போன்ற ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சந்திரயான் 4 நிலாவில் இறங்கி, அங்குள்ள சாம்பிள்கள் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து ஆராய்ச்சி செய்வதற்கான திட்டம் ஆகும்.
தற்போது இத்திட்டப் பணிகள், ஆராய்ச்சியாளர்கள் மூலம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, ஜப்பான்-இந்தியா கூட்டு முயற்சியில் சந்திரயான் 5 விண்கலம் உருவாக்கப்படும். அதற்கான ராக்கெட் தயாரிக்கும் பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. 6500 கிலோ எடையுடன் லேண்டர் மற்றும் 350 கிலோ எடையிலான ரோவருடன் ‘ரூபக் ஸ்பெஷல்’ எனும் சந்திரயான் 5 திட்டம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இவைகள் அனைத்தும் வரும் 2028ம் ஆண்டு ஏவப்படவிருக்கின்றன. இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
