சென்னை: பிரதமர் மோடி, எடப்பாடி, டிடிவி.தினகரன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்கள் படத்துடன் டபுள் இன்ஜின் அல்ல.. டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என்ற வாசகத்துடன் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டுக்கு ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் தேவை’’ என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதிலடி கொடுத்தார். ‘‘பிரதமர் சொல்லும் டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது.டபுள் இன்ஜின் மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள் தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. டபுள் இன்ஜின் என்று எழுதி அதை அடித்து டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது. அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம் என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது.
மோடி, எடப்பாடி, டிடிவி.தினகரனின் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. வித்தியாசமாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை மக்கள் பார்த்து கமென்ட் அடித்து வருகின்றனர். மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
