மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான போராட்ட வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரகுநாத், திருமலை, விவேக் உள்ளிட்ட 12 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு எதிராக கண்டன போராட்டத்தை நடத்தினோம். இதற்காக எங்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது பதியப்பட்ட வழக்கு ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா, இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, மனு மீதான விசாரணையை பிப்.3க்கு தள்ளி வைத்தார்.
