நெல்லை: சட்டமன்ற தேர்தலில் வணிகர் சங்கங்களின் ஆதரவு யாருக்கு என்பதை 15 நாட்களில் அறிவிப்போம் என நெல்லையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. அதற்கு அகில இந்திய அளவில் அதிக சிரமங்கள் இருக்கிறது. எனவே தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் தமிழ்நாடு வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து சட்ட திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என ஆலோசனை கேட்க வேண்டும். இந்த கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிடம் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். வியாபாரிகளின் கோரிக்கைகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தீர்மானித்துள்ளோம். அந்தத் தீர்மானங்களை சர்வ கட்சிகளுக்கும் அனுப்ப உள்ளோம். அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் எந்தெந்த கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றித் தருவார்கள் என எழுத்துப் பூர்வமாக அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். அதற்கு பின்னர் வணிகர் சங்க பேரமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டப்பட்டு வணிகர்களின் வாக்குகளை முடிவு செய்ய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திட்டமிட்டுள்ளது. எங்களது வாக்கு ஒரு கோடி வணிக குடும்பங்களை உள்ளடக்கியது. சட்டமன்ற தேர்தலில் எங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து வருகிற 15 நாட்களில் நிர்வாகிகள் ஒப்புதலை பெற்று அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
