நாகர்கோவில்: இந்தியத் தேர்தல் ஆணையம் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தை கடந்த 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து தவெகவினர் விசிலை ஊதி ஊதி பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். அரசு பஸ்களில் கண்டக்டர்கள் விசில் ஊதும்போது அது நமது சின்னம் என்று கூச்சல் போடுகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்படுவது மற்றும் அதை அரசு ஊழியர்கள் பயன்படுத்துவது தொடர்பான குழப்பங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளுக்கு முன்பே விளக்கம் தந்துள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், பிரசாரத்தின் போது விசிலை ஊதுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
2019 சட்டமன்றத் தேர்தலின் போது, மகாராஷ்டிரா, நளசோபரா தொகுதி எம்எல்ஏ க்ஷிதிஜ் தாக்கூர் தலைமையிலான பகுஜன் விகாஸ் அகாடி (பிவிஏ) கட்சியினர், தங்கள் தேர்தல் சின்னமான விசிலைப் பயன்படுத்திப் பேரணிகளில் அதிக ஒலி எழுப்பிப் பிரசாரம் செய்தனர். இது பொதுமக்களுக்கும், முதியோர்களுக்கும் இடையூறு செய்வதாக சுயேச்சை வேட்பாளர் சதீஷ் வாரேகர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், ஆணையம் பிவிஏ கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், பிரசாரத்தின் போது விசிலை ஊதுவதற்குத் தடை விதித்தது. சின்னம் என்பது காட்சிப்படுத்த மட்டுமே தவிர, ஒலி எழுப்பி இடையூறு செய்வதற்கல்ல என்று ஆணையம் குறிப்பிட்டது. இந்தத் தடை அரசு ஊழியர்கள் தங்கள் கடமைக்காக விசிலைப் பயன்படுத்துவதைப் பாதிக்காது என்று தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர்செய்யவும், அரசுப் பேருந்து நடத்துநர்கள் விசிலைப் பயன்படுத்துவது அவர்களின் பணி நிமித்தமான கடமை. இது அரசியல் பிரசாரமாகக் கருதப்படாது. தேர்தல் ஆணையம் சைக்கிள், கைக்கடிகாரம் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களையே சின்னங்களாக ஒதுக்குவதால், அவற்றைப் பணிக்கு உபயோகிப்பதற்குத் தடை இல்லை.
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்னவென்றால், ஒரு ‘சின்னம்’ என்பது வாக்காளர்கள் கட்சியை அடையாளம் காண உதவும் ஒரு காட்சிப்படுத்தக்கூடிய அடையாளம் (Visual Identity) மட்டுமே. அதை ஒலி எழுப்பக்கூடிய கருவியாகப் பயன்படுத்திப் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று கூறி வழிகாட்டுதல்களையும் அப்போது தேர்தல் ஆணையம் வழங்கியது. எனவே வரும் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போதும் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தேர்தல் ஆணையம் 2019ல் வெளியிட்ட விசில் சின்னம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்:
* பேரணிகளின் போது தொடர்ந்து விசிலை ஊதி அதிகப்படியான ஒலி எழுப்புவது, நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகும். இது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்ட செயலாகும்.
* விசில் சின்னம் என்பதால், கட்சித் தொண்டர்கள் விசில்களை வாங்கி ஊதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. கொடியிலோ, பதாகையிலோ அல்லது துண்டுப் பிரசுரத்திலோ காட்சிப்படுத்துவது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
