அரசியல் சதி நிறைந்த துறை; அதிமுக ஊழல் கட்சின்னா செங்ஸை ஏன் சேத்தீங்க: விஜய்க்கு டிடிவி பளார் கேள்வி

மதுரை: அரசியல் சதி நிறைந்த துறை என கூறியுள்ள டிடிவி.தினகரன், அதிமுகவை ஊழல் கட்சியென கூறும் விஜய், செங்கோட்டையனை கட்சியில் சேர்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது: நான் தவெக கூட்டணிக்கு வரவேண்டும் என செங்கோட்டையன் விருப்பப்பட்டார். மறுக்க முடியாமல் தயக்கமாக இருந்தேன். நான் கூட்டணிக்கு வருவேன் என அவர் நம்பினார். மற்றபடி சூழ்நிலை காரணமல்ல.

அரசியல் என்பது சதி நிறைந்த துறை. எடப்பாடி அமமுக தங்கள் கூட்டணியில் வரவேண்டும் என விருப்பப்பட்டார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு சென்றேன்.  அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். 2021 வரை அதிமுகவில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது தவெகவில் தானே உள்ளார். அதிமுக ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்த்துக்கொண்டுள்ளார்.

இது என்ன ‘ஸ்டாண்ட்’ என எனக்குப் புரியவில்லை. என்னைவிட மூத்தவர்கள் செங்கோட்டையன், வைத்திலிங்கம். அரசியல் ரீதியில் மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று நான் கூற முடியாது. நான் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஓபிஎஸ்சை அதிகாரப்பூர்வமாக நான் இங்கு அழைக்க முடியாது. யாரையும் நட்புரீதியாகத்தான் அழைக்கலாம்.

அவர் தான் முடிவெடுக்க வேண்டும். அவருக்கும் மன வருத்தம் இருக்கிறது. அவர் வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்காக என்னோடு 8 ஆண்டுகள் பயணித்தவர்கள், என்னைச் சார்ந்தவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். சசிகலா நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை. என்னோடு இத்தனை நாட்கள் பயணம் செய்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தொகுதி பங்கீடு கேட்போம். அது சுமுகமாக அமையும். எந்த ஒரு பிரச்னையும் இருக்காது.
இவ்வாறு தெரிவித்தார்.

* திமுக-தேஜ கூட்டணிக்கே போட்டி
டிடிவி.தினகரன் மேலும் கூறுகையில், ‘‘தவெக வளமான கூட்டணியை அமைப்பது போல தெரியவில்லை. திமுக கூட்டணிக்கும், எங்கள் கூட்டணிக்கும் தான் போட்டி. ஜெயிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கும். தேவைப்படும் இடங்களுக்கும், கூட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமியும், நானும் ஒன்றாக பயணம் செய்து, பிரசாரம் மேற்கொள்வோம்’’ என்றார்.

Related Stories: