சென்னை: ஸ்டீராய்டு மருந்துகளின் அதிக பயன்பாடு காரணத்தினால் ‘இரண்டாம் நிலை கண்அழுத்த நோய்’ ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவது. இது ‘செகண்டரி குளுக்கோமா’ எனப்படும் இரண்டாம் நிலை கண் அழுத்த நோய்க்கு முக்கிய காரணமாகிறது.
இதனால் பார்வையை மீண்டும் பெற முடியாத அளவுக்குக் குருட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒவ்வாமை, தோல் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகள் மற்றும் மருந்தகங்களில் நேரடியாக வாங்கிப் பயன்படுத்தும் கண் சொட்டு மருந்துகள், நீண்ட காலப் பயன்பாட்டில் கண்ணின் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இது பார்வை நரம்பைப் பாதிப்பதை நோயாளிகள் ஆரம்பத்தில் உணர்வதில்லை.
இந்தியாவில் சுமார் 1.3 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவிலான பாதிப்பில் ஆறில் ஒரு பங்காகும். இந்தியாவில் இப்பாதிப்பு ஏற்பட்டவர்களுள் 85-90 சதவீதம் பேருக்கு தங்களுக்கு இந்நோய் இருப்பதே தெரிவதில்லை. அறிகுறிகள் வெளியில் தெரியும்போது பார்வை நரம்பு ஏற்கனவே நிரந்தரமாகப் பாதிப்படைந்திருக்கும். எனவே ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் மண்டலத் தலைவர் டாக்டர் சௌந்தரி கூறியதாவது: மருத்துவர் ஆலோசனையின்றி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களிடையே கண் அழுத்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது ஆரம்பத்தில் எந்த வலியோ அல்லது அறிகுறியோ இருக்காது. ஆனால் கண்ணின் அழுத்தம் மெல்ல உயர்ந்து பார்வையை நிரந்தரமாகப் பறித்துவிடும்.
வயது முதிர்வு, சர்க்கரை நோய், கிட்டப்பார்வை மற்றும் நவீனப் பரிசோதனை முறைகளால் கடந்த சில ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளது. பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் வந்தாலும், தற்போது இளம் வயதினருக்கும் இந்நோய் ஏற்படுவதை டாக்டர்கள் காண்கின்றனர். பார்வை நன்றாக இருந்தால் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமல்ல.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் நீண்ட காலமாக ஸ்டீராய்டு பயன்படுத்துபவர்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெறும் பார்வைத் திறன் சோதனை மட்டும் போதாது. கண்ணின் அழுத்தத்தையும் நரம்பையும் பரிசோதிப்பதே உண்மையான பாதிப்பைக் கண்டறிய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
