காட்டுமன்னார்கோயில்: கூட்டணியில் ஒரு கட்சியை சேர்க்கும் விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தரக்கூடிய இடத்தில் விசிக இல்லை என திருமாவளவன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வி.சி.க. தலைவருமான திருமாவளவன் எம்.பி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று பாஜ கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. மதவாத அரசியலுக்கு, வெறுப்பு அரசியலுக்கு இந்தி சமஸ்கிருத திணிப்பு அரசியலுக்கு, ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் இடம்கொடுக்க மாட்டார்கள்.
2026 சட்டபேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர வேண்டும் என்பது குறித்து திமுக தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த கட்சியை சேர்க்க வேண்டும், இந்த கட்சியை சேர்க்கக் கூடாது என விசிக நிர்ப்பந்தம் செய்யாது. நாங்கள் திமுகவுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்தில் அல்லது நெருக்கடி தரக்கூடிய இடத்தில் இல்லை. எந்த ஒரு கட்சியின் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எங்களுக்கு கிடையாது.
திமுக கூட்டணியை எதிர்க்கிற வலிமை எந்த கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் இல்லை. குறிப்பாக அதிமுக, பாஜ ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே இருந்து வெளியேறிய கட்சிகளை இப்போது சேர்த்துள்ளார்கள், அவ்வளவுதான். மற்றபடி புதிய கட்சிகள் எதுவும் அந்த கூட்டணியில் இடம் பெறவும் இல்லை. அண்மையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி, மறந்தும் ஒருமுறை கூட அதிமுக தலைமையிலான கூட்டணி என்று சொல்லவே இல்லை.
இதுதான் இன்றைக்கு அதிமுகவின் நிலைமை. திமுக தலைவரை, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்த்து போட்டியிடக்கூடிய வலிமை பெற்ற ஒரு கட்சியும் இல்லை, ஒரு கூட்டணியும் இல்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது, வலிமையோடு இருக்கிறது. வெற்றிகரமாக இந்த தேர்தலை சந்திக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
