சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. திமுக தலைமையிலான அணியில் கடந்த முறை போட்டியிட்ட அதே கட்சிகள் மீண்டும் தொடர்கிறது.
அதாவது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. விரைவில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
