கோவை: கூட்டணி குறித்து நாங்கள் பேசி முடிக்கும் முன்பே டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள் என்று செங்கோட்டையன் நடுக்கத்துடன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தவெக உயர் மட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராமதாஸ் தரப்பு தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது கூட 100 நாட்கள் கூட கட்சி இருக்காது என சொன்னார்கள். அவர் உயிரோடு இருக்கும் வரை முதலமைச்சராக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார். தவெக மீதான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘இதற்கு முன்பு எல்லோரும் கூட்டணியில் இணைவார் என நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் பெரிய கட்சியின் கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போடப்பட்டது என சொன்னது எல்லாம் அவர்கள் தான்.
இன்று நிலைமை மாறும் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் ஆகியோர் தாக்குதல் நடத்துகின்றனர். புதிதாக உருவான கட்சி மீது குற்றச்சாட்டு சொல்வது எதிர்க்கட்சி நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று. இது வேதனை அளிக்க கூடிய ஒன்று. என் மீது ஊழல் குற்றச்சாட்டு என யாராவது சொன்னால், உச்சநீதிமன்றம் வரை சென்று எந்த குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி யாராவது கருத்துக்கள் சொன்னால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்’’ என பதிலளித்தார். ஓபிஎஸ் தவெக கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு, ‘‘ஒவ்வொருவர் கிட்டயும் நாங்கள் சொல்லி முடிக்கும் முன்பே, டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்னை எங்களுக்கு தான் தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது’’ என பதிலளித்தார்.
* டிடிவி இங்கதா வர ஆசப்பட்டார்… ஆனா…
‘தவெக கூட்டணிக்கு டிடிவி.தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை. ஒவ்வொருவர் நிலை அப்படி இருக்கிறது. அவர் ஒரு நாளைக்கு ஒரு நிலையில் இருக்கிறார். எங்களோடு வர வேண்டுமென நினைத்தார். சூழ்நிலைகள் அவருக்கு எப்படி ஏற்பட்டு இருக்கிறது என என்னால் சொல்ல இயலாது. எங்கு சென்றாலும் வாழ்க’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பாக்கெட்டில் இருக்கிறது
அண்ணாவை அதிமுக மறந்துவிட்டது என விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘அதிமுக அண்ணாவை மறந்து விட்டது. அதனால் தான் நான் வெளியில் வந்தேன். ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களை போடாமல் ஒருவர் போட்டோவை மட்டும் போட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
எல்லோரையும் மறைத்து விட்டு ஒருவரை உருவாக்குவது இயலாத காரியம். யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனது பாக்கெட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோ இருக்கிறது. இவர்கள் போல என்னால் மறக்க முடியாது. இதற்கு தவெகவில் ஜனநாயகம் இருக்கிறது’’ என செங்கோட்டையன் பதிலளித்தார்.
