சென்னை: தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞர் ஞானசுந்தரம் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மூத்த தமிழறிஞரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவருமான ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். கலைஞரின் நன்மதிப்பினையும் கொண்டிருந்தார். ஞானசுந்தரம் பக்தி இலக்கியங்கள் சார்ந்து, பல ஆய்வுநூல்களை எழுதியதோடு, தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் தமிழ் மேடைகளை அலங்கரித்த அறிஞர் ஆவார்.
எண்ணற்ற தமிழ் அமைப்புகள், அறக்கட்டளைகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும், 2024ம் ஆண்டுக்கான ‘இலக்கிய மாமணி’ விருதை மரபுத்தமிழ் பிரிவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு நான் வழங்கியபோது பெரிதும் அகமகிழ்ந்தார். ”தனியாரிடம் பெறும் விருதுகள் மகிழ்ச்சியளிப்பன என்றாலும், அரசு அளிக்கும் விருதுதான் அங்கீகாரம் பெறக்கூடியது” என அப்போது மனநிறைவுடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று, பல மாணவர்களுக்கு ஆசானாகத் திகழ்ந்து, இறுதிவரையில் சுறுசுறுப்பாக இயங்கித் தமிழ்ப்பணியாற்றிய அன்னாரது மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
