தமிழ்நாட்டினுடைய திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய ரூ.5 ஆயிரம் கோடியில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய தினம் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதுமட்டுமல்ல, She Leads என்ற தலைப்பில் சர்வதேச மாநாடும் இன்றில் இருந்து தொடங்க இருக்கிறது.

இங்கே ஆயிரக்கணக்கான மாணவிகள், தாய்மார்கள், மகளிர் வருகை தந்துள்ளீர்கள். உங்களுடைய இந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எப்போதும் தொடரவேண்டும். அதற்கு தான், நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு தான் இந்த Tamil Nadu We Safe திட்டம்.

நம்முடைய தமிழ்நாடு அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துகின்ற திட்டங்களை பார்த்து, உலக வங்கி இன்றைக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.1,250 கோடி கடனுதவியாக தருகின்றார்கள். பிறக்கும் பெண் குழந்தைகள் தொடங்கி, பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்கு செல்கின்ற மகளிர், இல்லத்தரசிகள், வயதான பெண்மணிகள் என்று அனைத்து தரப்பு மகளிரினுடைய பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்கின்ற வகையில் இந்த We Safe திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

வீட்டில் காலையில் இருந்து இரவு வரைக்கும் 24 மணி நேரமும் தாய்மார்கள் உழைக்கின்றார்கள். அவர்களுடைய உழைப்பை யாரும் பொருட்படுத்தவே இல்லை. முதன் முதலாக அங்கீகரித்தது நம்முடைய முதல்வர் தான். அதற்காக அவர் கொண்டுவந்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

இந்த திட்டத்திற்கு முதல்வர் தான் பெயர் வைத்தார். மாதம் 1,000 ரூபாய் என்பது ஏதோ சலுகைத்தொகை கிடையாது. அது பெண்களுடைய உழைப்பை அங்கீகரிக்கின்ற ‘உரிமைத்’ தொகை. இது மாதிரியான திட்டங்களால் தமிழ்நாட்டினுடைய திராவிட மாடல், இன்றைக்கு இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: