கேப்டவுன்: எஸ்ஏ20 டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, எஸ்ஏ20 வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மக்களிடம் செல்வாக்கு பெற்று திகழும் ஐபிஎல் போட்டிகளை போன்று தென் ஆப்ரிக்காவில் கடந்த 2022-23 முதல் எஸ்ஏ20 டி20 போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 3 தொடர்களில் 2ல் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அட்டகாச வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது நடந்து வரும் 4வது சீசன் எஸ்ஏ20 போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் கேப்டவுன் நகரில் நடந்தது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள சவுரவ் கங்குலி, தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வழிநடத்தி வரும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து முதலில் களமிறங்கிய பிரிடோரியா அணியின் துவக்க வீரர் கானர் எஸ்டெர்ஹுய்சென், சன்ரைசர்ஸ் அணியின் மார்கோ யான்சன் பந்தில் ரன் எடுக்காமல் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். பின் வந்த ஷாய் ஹோப், லூதோ சிபம்லா பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் பிரைஸ் பார்சன்ஸ் 30 ரன் எடுத்திருந்தபோது ரன்அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜோர்டான் காக்சை, 3 ரன்னில் ஜேம்ஸ் கோல்ஸ் ரன் அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுபுறம் டெவால்ட் புரூவிஸ், சன்ரைசர்ஸ் அணியின் அட்டகாச பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 101 ரன் விளாசி, மார்கோ யான்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்தோர் தாக்குப்பிடிக்காமல் சொற்ப ரன்களே எடுத்தனர். 20 ஓவர் முடிவில் பிரிடோரியா 7 விக்கெட் இழந்து 158 ரன் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் 3, லூதோ சிபம்லா, அன்ரிச் நார்ட்ஜே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதையடுத்து, 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் குவின்டன் டிகாக் 15 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன் எடுத்திருந்த நிலையில், லிஸாட் வில்லியம்ஸ் பந்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். இருப்பினும் பின்வந்த மேத்யூ பிரீட்ஸ்கி நேர்த்தியாகவும் பொறுப்புடனும் ஆடி ரன்களை குவித்தார். பின்வந்தோரில் ஜோர்டான் ஹெர்மான் 3, ஜேம்ஸ் கோல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின், பிரீட்ஸ்கி, கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்து, பிரிடோரியா வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினர். 65 பந்துகளை எதிர்கொண்ட அவர்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் விளாசினர். அதனால், 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. மேத்யூ பிரீட்ஸ்கி 49 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 68, ஸ்டப்ஸ் 41 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம், 3வது முறையாக சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, எஸ்ஏ20 தொடரில் அசைக்க முடியாத மெகா சக்தி என்பதை மீண்டும் நிரூபித்து சாதனை படைத்தது.
போட்டியில் வென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு ரூ. 18.48 கோடியும், தோற்று 2ம் இடம் பிடித்த பிரிடோரியா அணிக்கு ரூ. 9.23 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
