நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்ற இந்தியா; நாங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டின் பிராண்ட் இதுதான்!: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

கவுகாத்தி: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் 3வது போட்டி நேற்றிரவு கவுகாத்தியில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில் பும்ரா 3, பாண்டியா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் எடுத்தனர்.பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆக இஷான் கிஷன் 28 ரன்னில் அவுட் ஆனார். நாட் அவுட்டாக அபிஷேக் சர்மா 20 பந்தில் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 68, கேப்டன் சூர்யகுமார் 26 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன் விளாசினர். 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: நாங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டின் பிராண்ட் இதுதான். முதலில் பேட் செய்தாலும், சேசிங்கானாலும் அதிரடி பாணியைக் கடை பிடிக்கவே விரும்புகிறோம். ஒருவேளை 20 ரன்னுக்கு 3 விக்கெட் அல்லது 40 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தாலும், அந்தச் சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பது தெரியும். ஆனால், டி20ல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல, இந்த அதிரடி அணுகுமுறைதான் சிறந்தது என கருதுகிறேன்.

டாப் 3 பேட்ஸ்மேன்கள் பற்றி நான் என்ன சொல்ல?, அவர்கள் எனது வேலையை மிகவும் எளிதாக்கிவிட்டார்கள். அவர்கள் அமைத்துத் தரும் அடித்தளம் தான் எனக்கு பெரிய பலமாக இருக்கிறது” என்றார். தோல்வி குறித்துப் பேசிய சான்ட்னர், ”இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீச சவாலை அளித்தனர். பவர் பிளேவில் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சீஃபர்ட் அவுட் ஆனது பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பிறகு போராடி 150 ரன்னை எட்டினோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக இந்த ரன்கள் போதுமானதாக இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். நியாயமாகப் பார்த்தால் இந்த ஆடுகளத்தில் 180- 190 ரன் வரை அடித்திருக்க வேண்டும்.

இது போன்ற போட்டிகள் வரவிருக்கும் உலகக்கோப்பைத் தொடருக்குச் சிறந்த பயிற்சியாக அமையும். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, நம்பிக்கையுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம்” என்றார்.
இந்தியா 3-0 என முன்னிலை வகிக்க 4வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

10 ஆண்டுகள் நிறைவு;பும்ரா நெகிழ்ச்சி:
ஆட்டநாயகன் பும்ரா கூறுகையில், ”நான் பந்துவீச வருவதற்கு முன் ராணா, பாண்டியா எப்படி வீசினர், ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை கூர்ந்து பந்துவீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது, என்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பற்றிய பேசிய பும்ரா ”சிறுவயதில் இந்தியாவுக்காக ஒரு போட்டியிலாவது ஆட வேண்டும் என்று தான் கனவு கண்டேன். ஆனால் இன்று 10 ஆண்டு நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காயங்கள், வலிகள், விமர்சனங்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆரம்பத்தில் எனது பந்துவீச்சு முறையை பார்த்துவிட்டு, இவன் 6 மாதங்களுக்கு மேல் தாங்க மாட்டான், காணாமல் போய்விடுவான் என்றனர். ஆனால், இத்தனை ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தப் பயணம் இன்னும் தொடரும் என்று நம்புகிறேன்” என்றார்.

பிட்ஸ்.. பிட்ஸ்..
* அபிஷேக் சர்மா நேற்று 14 பந்தில் அரைசதம் அடித்தது இந்திய வீரரின் 2வது அதிவேக அரைசதமாகும். இதற்கு முன் அவரது *குரு யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
* நியூசிலாந்துக்கு எதிராக அதிகவேகமாக அரைசதம் அடித்தவர் அபிஷேக் சர்மா தான்.
* அபிஷேக், சூர்யா , 25க்கும் குறைவாக பந்துகளில் தலா 9 முறை அரைசதம் அடித்துள்ளனர். மற்ற யாரும் 7 முறையை தாண்டவில்லை.
* அபிஷேக் நேற்று 20 பந்தில் ஒன்று கூட டாட்பால் ஆடவில்லை. டாட்பால் ஆடாமல் அதிக ரன் எடுத்த வீரர் அவர் தான்.
* 2024 முதல் இந்தியா தொடர்ச்சியாக 11 டி.20 தொடரை கைப்பற்றி உள்ளது.

Related Stories: