எஸ்ஏ 20 தொடர்; சன்ரைசர்ஸ் சாம்பியன்: 3வது முறையாக மகுடம் சூடியது

கேப்டவுன்: இந்தியாவில் ஐபிஎல் போன்று தென்ஆப்ரிக்காவில் 6 அணிகள் பங்கேற்கும் எஸ்ஏ 20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 4வது சீசனின் இறுதிப்போட்டி நேற்றிரவு கேப்டவுனில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கேபிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டெவால்ட் பிரெவிஸ் 56 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 101 ரன் விளாசினார். பிரைஸ் பார்சன்ஸ் 30 ரன்எடுத்தார். சன்ரைசர்ஸ் பவுலிங்கில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 159 ரன்னை துரத்திய சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோவ் டக்அவுட் ஆன நிலையில் டிகாக் 18 ரன் அடித்தார். ஜோர்டான் ஹெர்மன் 3, ஜேம்ஸ் கோல்ஸ் ஒரு ரன்னில் அவுட்ஆகினர். 48 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 பந்தில் 63, மேத்யூ ப்ரீட்ஸ்கே 49 பந்தில் 68 ரன் எடுத்தனர். இதனால் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162ரன் எடுத்த சன்ரைசர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் 2 சீசனில் (2023,24) பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் கடந்த ஆண்டு பைனலில் எம்ஐ கேப்டவுனிடம் தோற்றது. தற்போது 3 வது முறையாக பட்டம் வென்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 சீசனில் 3ல் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சதம் அடித்த கேபிட்டல்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆட்டநாயகன் விருதும், சன்ரைசர்சின் டிகாக் தொடர் நாயகன்(390ரன்) விருதும் பெற்றனர்.

Related Stories: