ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் சின்னர், ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. நேற்று, ஆண்கள் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் 3வது சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையரில் உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் எலியட் ஸ்பிசிரியை எதிர்த்து ஆடினார். முதல் செட்டை பறிகொடுத்த சின்னர், அடுத்து சுதாரித்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதன்மூலம் 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு நட்சத்திர வீரரான (4ம் நிலை) செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் போடிக் வான்டியை எதிர்த்து ஆடினார். 6-3, 6-4, 7(7)-6(4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று, 4ம் சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 7(7)-6(5), 2-6, 6-4, 6-4 என சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டியில் நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஒக்ஸானா செலக் மெதேவாவை வென்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் 2ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவை வென்றார்.

உலகின் 5ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபைகினா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் தெரேசா வாலண்டோவாவை வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் நடப்பு சாம்பியனான அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், செக்குடியரசின் பிளிஸ் கோவாவை எதிர்த்து 3வது சுற்றில் ஆடினார். இப்போட்டியில் மிக எளிதாக 6-3, 6-3 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸ் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: