கவுகாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி.20 போட்டி இன்று நடக்கும் நிலையில், அதனை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள், டி.20 தொடரில் விளையாடுகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் துவங்கியது.
நாக்பூர், ராய்ப்பூரில் நடந்த முதல் 2, டி.20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை வகிக்கிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக மாறியுள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் டுபே, ரிங்குசிங் என அனைவரும் கலக்குகின்றனர்.
பவுலிங்கில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கின்றனர். ராய்ப்பூரில் நடந்த 2வது டி.20 போட்டியில் 208 ரன் இலக்கை 15.2 ஓவரில் எட்டி, இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த மிகப்பெரிய தோல்விக்கு பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், இந்தியாவிற்கு 300 ரன் இலக்கு நிர்ணயித்தாலும் போதாது போல் இருக்கிறது என அதிர்ச்சியூட்டும் வகையில் கூறினார்.
அந்த அளவிற்கு இலக்கை துரத்துவதில், ரன் வேட்கையை இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகரித்துள்ளனர். இன்று (25ம் தேதி) அசாம் மாநிலம் கவுகாத்தி பர்சபாரா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு துவங்கும் 3வது டி.20 போட்டியில் வெற்றி பெற்று, இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி முயற்சிக்கும்.
அந்த அணியில் பிளீப்ஸ், ரவீந்திரா, சான்ட்னர் பேட்டிங்கில் அசத்துகின்றனர். அதனால் அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தொடக்கவீரர் கான்வே பார்ம்மிற்கு வராதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. ஒருநாள் போட்டி தொடரை இழந்த இந்தியா, இப்போட்டியில் வென்று டி.20 தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
