மும்பை: இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவர சூழலால் ஐபிஎல் கொல்கத்தா அணியிலிருந்து வங்கதேசத்தின் முஸ்தபிகுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதனால் கொதிப்படைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வர தங்கள் வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறி வந்தது.
இதுகுறித்து அந்நாட்டிற்கு சிறப்பு குழுவை அனுப்பிய ஐசிசியிடம் தாங்கள் இந்தியாவில் விளையாட விரும்பவில்லை என்றும் தங்களது அணி இடம் பெற்றுள்ள பிரிவை மாற்றினால் இலங்கையில் வைத்து விளையாட தயாராக இருப்பதாக அறிவித்தனர். ஆனால் ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த கோரிக்கையை முறையாகக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்தத் தொடரைப் புறக்கணிப்பதாக வங்கதேசம் அறிவித்தது.
வங்கதேசத்தின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, துபாயில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கதேச அணியை நீக்கிவிட்டு மாற்று அணியாக ஸ்காட்லாந்தை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஸ்காட்லாந்து அணி ஏற்கனவே 5 முறை டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளது. கடந்த 2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ‘சி’ பிரிவில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் உள்ளன.
