விஜ்ஆன்ஸீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2026 செஸ் போட்டியின் 7வது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் தோல்வியை தழுவினார். நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2026 செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 7வது சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், ரஷ்யாவில் பிறந்து நெதர்லாந்து நாட்டுக்காக ஆடி வரும் அனிஷ் கிரியிடம் தோல்வியை தழுவினார். இது, குகேஷ் தொடர்ச்சியாக சந்திக்கும் 2வது தோல்வியாகும்.
மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்ட்டிடம் தோல்வி அடைந்தார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியும், துருக்கியை சேர்ந்த 14 வயது கிராண்ட் மாஸ்டர் யாகிஸ் கான் எர்டோக்மஸிடம் பரிதாப தோல்வியை சந்தித்தார். 3 இந்தியர்கள் தோல்வியை சந்தித்த நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஜெர்மன் கிராண்ட் மாஸ்டர் மாத்தியாஸ் புளுபாம் உடன் நடந்த போட்டியில் டிரா செய்தார்.
7 சுற்றுகள் முடிந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் 5.5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவ் 4.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். குகேஷ், எரிகைசி 3 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர். பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள அரவிந்த் சிதம்பரம் 2 புள்ளிகள் மட்டும் பெற்றுள்ளார்.
