கவுகாத்தி: இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீசியது. முதலில் களமிறங்கிய நியூசி அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே 1 ரன்னிலும், பின் வந்த ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். மற்றொரு துவக்க வீரர் டிம் ஷெபெர்ட் 12 ரன் எடுத்தார். பின் வந்தோரில் கிளென் பிலிப்ஸ் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 48 ரன் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடியதால், நியூசி, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழந்து 153 ரன் எடுத்திருந்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின், 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
துவக்க வீரர் சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா அட்டகாசமாக ஆடி 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். இடையில் வந்த இஷான் கிஷண் 28 ரன் எடுத்து அவுட்டானார். பின் இணை சேர்ந்த அபிஷேக் (20 பந்து, 5 சிக்சர், 7 பவுண்டரி, 68 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (26 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி, 57 ரன்), நியூசி பந்துகளை வேட்டையாடி ரன்கள் குவித்தனர். அதனால், 10 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதனால், 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
