மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இன்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் மோதவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், ஆஸி வீராங்கனை மேடிசன் இங்லீஸ் மோதினர்.
துவக்கம் முதல் துள்ளலாய் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய இகா, 6-0 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை அதிரடியாக கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் காலிறுதிக்கு முன்னேறிானர். மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, சீனாவின் வாங் ஸிங்யுவை எதிர்கொண்டார். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை எடுத்தனர்.
டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் அமண்டா கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் காலிறுதிப் போட்டிகளில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா – அமண்டா அனிசிமோவா, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா – அமெரிக்காவின் இவா ஜோவிக் மோதவுள்ளனர்.
முசெட்டியின் கதையை முடிப்பாரா ஜோகோவிச்?
ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், சக இத்தாலி வீரர் லூசியானோ தார்தெரி உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சின்னர், 6-1, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் செக் வீரர் ஜாகுப் மென்சிக் காயத்தால் வெளியேறியதால், செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் போட்டியின்றி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடக்கும் காலிறுதியில், இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டியை, ஜோகோவிச் எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் உடன் மோதவுள்ளார்.
