சிவகாசி, ஜன.20: சிவகாசி அருகே வாலிபரை கத்தியால் குத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகை ராஜன்(30). இவரது மகளுக்கு சம்பவத்தன்று காதணி விழா நடைபெற்றது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் பாண்டீஸ்வரன்(21) என்பவர் கார்த்திகை ராஜனிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகை ராஜனை குத்த முயன்றுள்ளார். அங்கிருந்த ராஜ்கமல் என்ற வாலிபரும், பொன்னுத்தாய் என்ற மூதாட்டியும் பாண்டீஸ்வரன் கையில் இருந்த கத்தியை பிடிங்கி உள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர்.
