வாடிப்பட்டி, ஜன. 20: சமயநல்லூர் அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு நேற்று பிற்பகல் ஏராளமான பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சமயநல்லூர் அருகே கட்டபுலிநகர் எனும் இடத்தில் வந்தபோது பேருந்தின் பின்புற டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதிய பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் டிரைவரான உசிலம்பட்டியை சேர்ந்த சுப்புராஜ், பேருந்தில் பயணித்த விருதுநகரைச் சேர்ந்த மகேஷ் மகன் சித்தார்த் (20) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தின் எதிரொலியாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த சமயநல்லூர் போலீசார் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் இருந்த பிற பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் பழநிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
