சென்னை: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை மற்றும் தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டு கொள்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை-2026 தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வலுவான சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு உதவி புரிந்து வருகிறது. இந்த வளர்ச்சியில் சேமிப்பு கிடங்கு கட்டமைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
எனவே, இந்த கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த புதிய கிடங்கு கட்டமைப்பின் வளர்ச்சி, பழைய கிடங்குகளின் திறன் விரிவாக்கம், கிடங்கு துறையில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு, நிலையான மற்றும் நவீன தொழில்நுட்ப கிடங்குகள், பொருட்களுக்கேற்ற பிரத்யேக கிடங்குகள் மற்றும் கிடங்குத் துறையில் தொழில் புரிவதற்கு உகந்த எளிய வழிமுறைகள் ஆகிய 6 கருப்பொருட்களை கொண்ட தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்களாக, டெல்டா மற்றும் தொழில் துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு நிதி சார்ந்த சிறப்பு ஊக்க சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, தகுதியான முதலீடுகளில் 25 சதவிகித நிலையான மூலதன மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்) மற்றும் நில விலை மானியமாக வணிக நில விலையில் 50 சதவிகித சலுகை, புதிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கும்போது மேற்கொள்ளப்படும் பசுமை முன்முயற்சிகளுக்கான மதிப்பில் 25 சதவிகித மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்),
பயிற்சி மானியம் – புதிய சேமிப்பு கிடங்குகளின் பணியாளர்களுக்கு தொழிற்நுட்ப பயிற்சி வழங்குவதற்கான தொகையில் 50 சதவிகித மானியம் (ஒரு பணியாளருக்கு ரூ.10,000க்கு மிகாமல்), அரசு நிலங்களில் பெரிய அளவிலான புதிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு சிறப்பு ஊக்க சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை-2026 மற்றும் தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டு கொள்கை-2026 ஆகிய கொள்கைகள், இத்துறைகளில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலை நிறுத்துவதுடன், 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதாரம் லட்சிய இலக்கினை அடையவும் உதவும்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
