தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச. 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுவதால் நேற்றும் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 3ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை மலை மீது தீபம் காட்சியளிக்கும். எனவே, தீபத் திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்திற்காக குவிக்கின்றனர். எனவே, தரிசன வரிசையில் பல மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வெளி பிரகாரம் வரை வரிசை நீண்டது. மேலும், தொடர்ந்து 6வது நாளாக நேற்று மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.

Related Stories: