போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்து தகராறு செய்த கைதி ஆரணியில் பரபரப்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்றபோது

ஆரணி, பிப்.25: வேலூர் மத்திய சிறையில் திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாண்டியன் (எ) பர்மா பாண்டி என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று சிறையில் இருந்து பாண்டியனை போலீசார் பல்வேறு வழக்குகள் விசாரணைக்காக பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றிருந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அவரை போலீசார் நேற்றிரவு விழுப்புரத்தில் இருந்து ஆரணி வழியாக வேலூருக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில், இரவு வாகனத்தை நிறுத்திய போலீசார், பாண்டியனுக்கு உணவு வாங்கி கொடுத்தனர்.அப்போது, பாண்டியன் திடீரென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை சமரசம் செய்ய முயன்றபோது, ஆத்திரமடைந்த பாண்டியன் திடீரென காவல்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து கூச்சலிட்டு தகராறு செய்தார். மேலும் உடைக்கப்பட்ட கண்ணாடியை எடுத்து போலீசாரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் என்ன செய்வது என்று புரியாமல், அந்த குற்றவாளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். உடனே பொதுமக்கள் போட்டோ, வீடியோ எடுத்ததால் போலீசார் அந்த குற்றவாளியை அழைத்துக்கொண்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து வேலூருக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆரணியில் நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: