திருவண்ணாமலை, பிப்.27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.4.02 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் கோயில் இணையதளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் ரூ.4 கோடியே 2 லட்சத்து 879ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதுதவிர 135 கிராம் தங்கம், 1420 கிராம் வெள்ளி ஆகியவையும் உண்டியலில் கிடைத்தது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வழக்கம்போல இந்த மாதமும் காணிக்கை அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உண்டியல் எண்ணும் பணி நிறைவடைந்ததும் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
