ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி போளூரில் வீட்டை அளக்க

சேத்துப்பட்டு, பிப்.28: போளூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கையும் களவுமாக பிடிபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் சின்னராசு. இவர் தனது வீட்டை அளக்க திட்டமிட்டார். இதற்காக போளூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவைப்பிரிவில் சர்வேயராக பணிபுரிந்து வரும் சக்திவேல் (42) என்பவரிடம் அணுகினார். இதுதொடர்பாக மனு அளித்ததோடு பலமுறை அவரிடம் அணுகியதாக தெரிகிறது. ஆனால் சர்வேயர் சக்திவேல், சின்னராசுவின் வீட்டை அளக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன் சின்னராசு மீண்டும் அணுகியபோது, ‘உங்கள் வீட்டை அளக்க ரூ.6000 லஞ்சம் தரவேண்டும்’ எனகேட்டாராம். ஆனால் லஞ்சம் தர விரும்பாத சின்னராசு, இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையிலான 10 பேர் கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் ரூ.5 ஆயிரம் நோட்டுக்களை சின்னராசுவிடம் கொடுத்தனுப்பினர். இதனை சர்வேயரிடம் அவர் வழங்கினார். அதனை அவர் பெற்று எண்ணிக்கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் சக்திவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: