திருவண்ணாமலை, பிப்.26: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வரும் 2ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 124 தேர்வு மையங்களில் 27,198 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுகள் 11.03.2026 முதல் 06.04.2026 வரை நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 149 தேர்வு மையங்களில் 30,805 மாணவ – மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். பொதுத்தேர்வுக்கான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது: தேர்வெழுதும் மாணவர்கள் எவ்வித அச்சமும் பதற்றமும் இல்லாமல் உற்சாகத்துடன் தேர்வு எழுதும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தினையும் அறிவுரைகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். மேலும், பள்ளி இறுதி தேர்வு என்பது வாழ்க்கைக்கான இறுதித் தேர்வு அல்ல. இது வாழ்க்கையின் முதல் படி. இத்தேர்வினை ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் எதிர்கொள்ள மாணவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடாக தேர்வு இருக்க வேண்டும். இந்த தேர்வு ஒரு சிலருக்கு சற்று கடினமாக தோன்றலாம். ஆனால், இது உங்களின் நீண்ட கல்வி பாதையின் ஒரு படி மட்டுமே என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சற்று பதட்டமாகவும் அழுத்தமாகவும் காணப்படுவது இயல்பான ஒன்றுதான். இந்த தேர்வுகள் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு படிக்கட்டு. உடல் நலத்தின் மீதும் மனநலத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம். சத்தான உணவை சரியான இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் தேர்வுகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாக மாணவர்கள் திட்டமிடுங்கள். இவர் அவர் தெரிவித்தார்.
