வந்தவாசி, பிப்.26: வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில் பலியான ஆசிரியர் தம்பதியின் மகளும் நேற்று பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் சக்திநகரை சேர்ந்தவர் அப்பாண்டைராஜன்(49). இவர் தென்சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜீவிதா(41). வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் திவ்ய(16), பிளஸ் 2 மாணவி. இந்நிலையில் ஜீவிதாவின் உறவினர் வீட்டு திருமணம் கடந்த 21ம் தேதி வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி அப்பாண்டைராஜன், ஜீவிதா, திவ்ய ஆகிய 3 பேரும் பைக்கில் சென்றனர். திருமண வரவேற்பு முடிந்து அன்றிரவு 11 மணியளவில் மூவரும் பைக்கில் புறப்பட்டனர்.
திருமண மண்டபம் எதிரே உள்ள சாலையில் வந்தபோது ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இதில் ஜீவிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்பாண்டைராஜன், திவ்ய இருவரையும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வழியிலேயே அப்பாண்டைராஜன் இறந்தார். திவ்யக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
