டிராக்டர் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி திருமணத்திற்கு சென்றபோது சோகம் சேத்துப்பட்டு அருகே விபத்து

சேத்துப்பட்டு, பிப்.24: சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சஞ்சலா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2வது மகன் சக்திவேல் (21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பரான நமத்தோடு கிராமத்தை சேர்ந்த மரம்வெட்டும் தொழிலாளியான வல்லரசுவை (22) டூவீலரில் அழைத்துக் கொண்டு போளூரில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தார். டூவீலரை சக்திவேல் ஓட்டிச்சென்றார்.

தச்சம்பாடி கிராமம் அருகே சென்றபோது முன்னால் வேகமாக சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டது. இதனால் பின்னால் வந்த இவர்களது பைக், டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சக்திவேல், வல்லரசு இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து வந்த சேத்துப்பட்டு போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பருடன் திருமணத்திற்கு சென்றபோது 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: