திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில், மாசி மகத்தை முன்னிட்டு கவுதம நதியில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நாளை மறுதினம் (2ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் தனிச்சிறப்பு மிக்கது. அதன்படி, தை 5ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று வட பெண்ணையாறு என அழைக்கப்படும் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் கவுதம நதிக்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளாள மகாராஜாவுக்கு, திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, கவுதம நதியில் அண்ணாமலையார் தீர்த்தவாரியும் மாசி மகம் தினத்தன்று நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலையில், அண்ணாமலையார் திருக்கோயில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர், குழந்தை பேறு இல்லாமல் மனம் வருந்தியபோது, அண்ணாமலையாரே முரல் வடிவில் குழந்தையாக தரிசனம் அளித்தார். எனவே, இறைவனையே மகனாக பாவித்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் அண்ணாமலையார் நேரில் சென்று திதி அளிப்பது மரபாகும்.
இந்நிலையில், மாசி மகம் நட்சத்திர தினமான வரும் 2ம் தேதி, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் கவுதமநதியில், அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மேலும், வள்ளால மகாராஜாவுக்கு திதி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். பகல் 12 மணியளவில் கவுதம நதிக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத்தொடர்ந்து, வள்ளால மகாராஜாவுக்கு திதி வழங்கும் நிகழ்ச்சியும், கவுதம நதியில் சுவாமி தீர்த்தவாரியும் நடைபெறும். அதையொட்டி, தீர்த்தவாரி நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. கவுதம நதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுகிறது. தீர்த்தவாரி நடைபெறும் ஆற்றுக்குள் பக்தர்கள் இறங்காதபடி, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
