சென்னை: மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம் என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆண்டாண்டு காலமாகவே கார்த்திகை தீபத் திருநாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவதுதான் ஆகம மரபு. அதன்படியேதான் இந்தாண்டும் தீபத்தினை ஏற்றியுள்ளது கோயில் நிர்வாகம். இதற்கு நேர் கோட்டில் தான் திருப்பரங்குன்றம் கோயிலின் கர்ப்பகிரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் வேறெங்கும் இல்லை என்பதுதான் இதன் சிறப்பே. நூற்றாண்டு கால மரபின் படியும், மக்களின் நம்பிக்கை படியும் கார்த்திகைத் தீபத்தை ஏற்றியுள்ளது கோயில் நிர்வாகம். இதனை மக்களும் அறிவர். ஆனால், புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை சனாதனவாதிகள் சொல்வார்களா? அதற்கு வரலாற்று ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா?.
இவர்களின் போலி ஆன்மீக பக்தியை தமிழ்நாடு என்றும் ஏற்காது! மக்கள் எப்போதோ விழித்துக்கொண்டார்கள் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பதிலடி தரப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முருகன் கோயில் மற்றும் வேல், மசூதி, கிறிஸ்துவ தேவாலயம் படம் போடப்பட்டிருந்தது.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற அடிப்படையில் அந்த படங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், “அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?. காக்க காக்க தமிழ்நாட்டை காக்க. விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட. போராடுவோம் வெல்வோம்” என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. முக்கிய இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
