அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாக்கெட்டில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, சீனிவாச வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஒப்பந்ததாரர் நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 24 மணி நேரமும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மார்க்கெட்டில் சேர்ந்துவரும் தினமும் சுமார் 15 டன் குப்பை கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறுகையில், ‘’வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் சேராதவாறு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் கால்வாய் பகுதியில் குப்பைகள் சேராதவாறு அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் 1000 டன்கள் வரை குப்பை அகற்றப்பட்டு வருகின்றன. குப்பை கொட்டுவதற்கான சாதனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
தற்போதுள்ள 300 தூய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 200 பணியாளர்களை நியமித்து குப்பைகள் அகற்றப்படுவதுடன் மாதம் ஒருமுறையாவது மாஸ் கிளீனிங் செய்துவருகிறோம்’’ என்றனர்.
